sand

Advertisment

லைநகர் சென்னையைப் புரட்டிப்போட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு, ஏரிகளையும், குளங்களையும், அதற்கான நீர்வழிப் பாதைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழகம் முழுவதுமுள்ள இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2017 மே மற்றும் ஜூன் மாதத்தில் சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில் நல்ல மழை பெய்தது. இதையடுத்து ஓமலூர் வட்டம், கமலாபுரத்தின் வடக்கிலுள்ள சின்ன ஏரி முழுவதும் நிறைந்து மீதி தண்ணீர், கமாலாபுரம் வழியாக செல்லும் உபரி நீர் வாய்க்காலில் சென்று கோட்டமேட்டுப்பட்டி கிராமம், ஆர்.சி.செட்டிப்பட்டி என்ற ஊரில் உள்ள ஏரியும் நிரம்பியது.

சின்னேரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் மதகு 42.6 மீட்டர் அகலத்தில் உள்ளது. இங்கிருந்து ஆர்.சி.செட்டிப்பட்டி வரையில் உள்ள 2.75 கிலோமீட்டர் தொலைவுக்கும் கசிவுநீர் செல்லும் வாய்க்கால் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை, 15 மீட்ட அகலத்துக்கு குறைவில்லாமல் இருந்தது. காலப்போக்கில் இந்த நீர்வழிப்பாதை முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது பத்து அடி அகலம் கூட இல்லாத நிலையில் உள்ளதால் சின்ன மழை பெய்தாலும் வெள்ள பாதிப்புதான்.

Advertisment

இதனை ஒழுங்கு செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், கமலாபுரத்திலுள்ள தமிழர் வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, நீர்வழிப் பாதையை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஊராட்சி, அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், பொதுப்பணித்துறையின் சரபங்கா வடிநில உட்கோட்ட அலுவலகம் என பல இடங்களில், தேடி அலைந்து, சின்ன ஏரி வாய்க்காலின் முழுமையான வரைபடத்தைப் பெற்று, இந்த வரைபடத்தில் உள்ளவாறு முழுமையான அளவுகளுடன், கசிவு நீர் பாதையை அமைத்து கொடுக்குமாறு கமலாபுரம் பொதுமக்கள் சார்பில் ஓமலூர் வட்டாட்சியருக்கு புகார் மனு கொடுத்துள்ளனர்.

sand

Advertisment

இந்த மனுவின் மீது வருவாய் ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வில் ஆக்கிரமிப்பு வீடுகளை அடையாளம் கண்டு வட்டாட்சியருக்கு அறிக்கை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி அறிக்கை அனுப்புமாறு ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, 02-1-17 அன்று ஓமலூர் வட்டாட்சியர் சித்ரா என்பவர் உத்தரவிட்டுள்ளார். எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், வாய்க்கால் கரையில் அதிகாரிகள் ஒரு சிமெண்டு கல் நட்டு வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

அந்தக் கல்லில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், சின்ன ஏரி வாய்க்கால் தூர்வாருதல் பணிக்காக 7214 ஆட்களின் மனித சக்தி பயன்பட்டதாகவும், இதற்கு 14,79,000 ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் இருந்துள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின், தனிநபர் கழிப்பறை அமைப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ரோகிணியிடம், ஊர் மக்கள் சார்பில், செய்யாத வேலைக்கு 14,79,000-ரூபாய் பணம் செலவு செய்துள்ளது குறித்து புகார் கொடுத்துள்ளனர். அவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

sand

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த ஜெயமோகன், பிரசாத், முருகன் ஆகியோர், ""முதலில் எந்த வாய்க்கால் யார் பொறுப்பில் உள்ளது என்பதே எங்களுக்கு தெரியவில்லை என்று சொன்ன ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், இப்போது 15 லட்சம் செலவு செய்துள்ளதாக கல்வெட்டு வைத்துள்ளனர். இதுகுறித்து நாங்கள் கலெக்டரிடம் புகார் கொடுத்த பின்னர், கடந்த இரண்டுநாளாக நூறுநாள் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்டுபோய் இந்த வாய்க்காலில் உள்ள செடி, கொடிகளை பிடுங்கிக்கொண்டுள்ளனர். "ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் என அதிகாரிகளிடம் சொன்னால் குண்டர் சட்டத்தில் உள்ளே போடுவோம்' என்று அதிகாரிகள் எங்களை மிரட்டி வருகிறார்கள்'' என்கின்றனர்.

கமலாபுரத்திலிருந்து செட்டிப்பட்டிக்கு போகும் வாய்க்கால் கரையின் வழியாக நாம் பயணம் செய்தோம். முதலில் ஐம்பதடி அகலத்தில் ஆரம்பிக்கும் வாய்க்கால் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைசியில் நான்கு அடி அகலம் மட்டுமே உள்ளது. இதில் இருபது பேர் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அந்த வாய்க்கால் கரையில் இருந்த மாதேஷ், ""வாய்க்காலின் கரையில் லாரி போகும் அளவுக்கு பாதையும், இருபதடி அகலம் தண்ணி போகும் அளவுக்கு வாய்க்காலும் இருந்தது. இப்போது முற்றிலும் ஆக்கிரமிப்பில் உள்ளது.

ஒரு வேலை முடியும்போதுதான் இந்த வேலையை எத்தனைபேர் எவ்வளவுநாள் செய்துள்ளார்கள் என்று கணக்கிட முடியும். இங்கே வேலை துவங்கும்போதே 7214 ஆட்கள் வேலை செய்துள்ளனர். இதற்கு 14,79,000 லட்சம் செலவாகும் என்று எப்படி சொல்லமுடியும்....?'' என கேட்கிறார் ஆவேசமாக.

இந்தக் கேள்விக்குப் பொறுப்பு அலுவலர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீஸ்வரன் தொடங்கி கலெக்டர் ரோகிணி வரை யாரிடமும் பதில் இல்லை.

-பெ.சிவசுப்ரமணியம்